உத்தரப் பிரதேசம், அசம்கர் மாவட்டம் பரசுராம்பூர் பகுதியைச் சேர்ந்த சம்சுதீனின் மகன் அனிஷ் (25). ஜங்கள்திஷ் கிராமத்தை சேர்ந்த ருக்ஷனா (20) என்பவருடன் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பகல் 2 மணியளவில் வீட்டிற்கு அருகே நடந்துச் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் அனிஷை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர். சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு சென்று அனிஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பரிசோதித்ததில், சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்த ரிங்கு (22) என்பதும் கண்டறியப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ரிங்குவும் ருக்ஷனாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த உறவை அறிந்த ருக்ஷனாவின் பெற்றோர், அவரை கண்டித்து, மிரட்டி அனிஷுடன் திருமணம் செய்து வைத்ததாக போலீசார் கூறினர்.
ஆனால் திருமணத்திற்கு பிறகும் ருக்ஷனா தனது காதலன் ரிங்குவுடன் தொடர்பில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதை அறிந்த அனிஷ், மனைவியை திட்டியதோடு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மனமுடைந்த ருக்ஷனா நடந்ததை ரிங்குவிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரிங்கு, “அவனை கொன்று விடுகிறேன்… உன்னை நான் கவனித்துக்கொள்கிறேன்” என ருக்ஷனாவிடம் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அதன் படி நண்பனை இணைத்துக்கொண்டு அனிஷை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதில் ருக்ஷனாவும் துணைபுரிந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து ரிங்குவும் ருக்ஷனாவும் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் திருமணமாகி வெறும் 7 நாட்களிலே, புதுமணப்பெண் தனது காதலனை ஏவி கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
