சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையின் பகுதியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கிளை அலுவலகத்தின் படிக்கட்டுகள் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் லாரியில் வைக்கப்பட்ட ஏணியின் மூலம் கிளைக்குள் நுழைந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் பத்ராக் நகரிலுள்ள சார்ம்பா பஜாரில் அமைந்துள்ள எஸ்பிஐ கிளைக்கு முன்பாக சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கண்டறியப்பட்ட முன்பக்கமும் படிக்கட்டும் அதிகாரிகளால் இடிக்கப்பட்டது. சார்ம்பா பஜாரிலிருந்து பத்ராக் ரயில் நிலையம் வரையிலான ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ் பல கடைகள், வீடுகள் மற்றும் தற்காலிக கட்டுமானங்கள் அகற்றப்பட்டன.
#WATCH | Bhadrak | Customers of the State Bank of India (SBI) branch at Charampa market in Bhadrak were compelled to climb a ladder placed on the back of a tractor to enter the bank, after its staircase was demolished during an anti-encroachment drive.#Odisha pic.twitter.com/807JtzxaVy
— OTV (@otvnews) November 24, 2025
இந்த இடிப்புக்கு முன், வங்கி நிர்வாகத்திற்கும் கட்டிடம் உரிமையாளருக்கும் பல முறை நோட்டீஸ் அனுப்பியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் பொருட்படுத்தப்படாததால், துணை ஆட்சியர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியை காலி செய்ய பொதுமக்களுக்கும் இரண்டு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
படிக்கட்டுகள் அகற்றப்பட்டதால், இரண்டாவது மாடியில் செயல்படும் வங்கிக்குள் நுழைவதற்கு வழியில்லாமல் போனது. இதன் பின்னர், வங்கி நிர்வாகம் தற்காலிக ஏற்பாடாக ஒரு லாரியின் மேல் மர ஏணியை வைத்து நுழைவு வசதியை ஏற்படுத்தியது. இந்த காட்சி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி பெரும் விமர்சனத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
“வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் செல்ல உயிரைப் பணயம் கட்ட வேண்டிய நிலை இது எப்படி?” என ஒருவர் கருத்து பதிவிட்டார். மற்றொருவர், “படிக்கட்டு சட்டவிரோதமானது என்றால், வங்கி கட்டிடத்தை வாடகைக்கு எடுப்பதற்கு முன் சரிபார்க்க வேண்டியது தானே?” என்றும் விமர்சித்தார்.
மேலும் இந்த சம்பவத்தின் பின்னர், கட்டிடம் உரிமையாளர் புதிய எஃகு படிக்கட்டுகளை அமைத்து, வங்கிக்குள் சாதாரண நுழைவு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
