கணவர் சவுரப் ராஜ்புத்தை கொடூரமாகக் கொலை செய்து, உடலை நீல நிற டிரம்மில் மறைத்த வழக்கில் மீரட் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்கன், திங்கள்கிழமை மாலை உள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தைக்கு தாயானார் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி அளவில் பிரசவ வலி அதிகரித்ததால், முஸ்கனை லாலா லஜபதி ராய் நினைவு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து சென்றதாக மூத்த சிறை கண்காணிப்பாளர் டாக்டர் வீரேஷ் ராஜ் சர்மா தெரிவித்தார்.
மருத்துவக் கல்லூரி மகப்பேறு துறைத்தலைவர் டாக்டர் ஷகுன் சிங் தகவல் தருகையில், புதிதாகப் பிறந்த குழந்தையின் எடை 2.4 கிலோ என்றும், சாதாரண பிரசவம் மூலமே குழந்தை பிறந்ததாகவும் தெரிவித்தார். தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் சிறை நிர்வாகம் கூறியுள்ளது.
முஸ்கனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தின் காரணமாக, மருத்துவமனையின் பிரதான நுழைவாயில் மற்றும் வார்டு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முஸ்கனின் உடல்நிலை குறித்து மருத்துவ குழு தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது.
மார்ச் 4 அன்று, மீரட் இந்திராநகர் பகுதியில் உள்ள வீட்டில் சவுரப் ராஜ்புத்தை முஸ்கனும் அவரின் காதலரென கூறப்படும் சாஹில் சுக்லாவும் போதைப்பொருள் கொடுத்து குத்திக் கொன்றனர். பின்னர் சவுரப்பின் உடலைத் துண்டித்து, தலை மற்றும் கைகளை வெட்டி, சிமென்ட் நிரப்பப்பட்ட நீல நிற டிரம்மில் மறைத்தனர்.
குற்றத்தைத் தொடர்ந்து இருவரும் இமாச்சலப் பிரதேசத்திற்கு தப்பிச் சென்றனர். இந்த பரபரப்பான வழக்கில், முஸ்கன் கடந்த 2023 நவம்பர் மாதத்திலிருந்தே கொலையைத் திட்டமிட்டிருந்தார் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களது காதல் தொடர்புக்கு சவுரப் தடையாக இருந்ததால் கொலை செய்யப்பட்டார்”.
மார்ச் 18 அன்று முஸ்கனும் சாஹிலும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்படுவதற்கு முன், முஸ்கன் தனது குடும்பத்தினரிடம் சம்பவத்தை ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குழந்தையின் தந்தை யார் என்பதை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை நடைபெற இருப்பதாகவும் ஒருவேளை அவரது கணவர் குழந்தையாக இருந்தால் சௌரப் குடும்பத்தினர் தத்தெடுக்க தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
