அமெரிக்கா, டெக்சாஸின் சான் அன்டோனியோ நகரில் நதிப் பயணத்தின் போது, ஒரு பெண் மிளகுத்தூளை பயணிகள் மீது தெளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு இந்தியக் குடும்பம் உட்பட எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சான் அன்டோனியோவில் பிரபலமான Go Rio River Walk படகு சுற்றுலாவில் பயணிகள் வழக்கம்போல் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பெண்ணின் செயலால் நிலைமை திடீரென, குழப்பமாகியது.

 

அந்தப் பெண்ணிடம் தொலைபேசியின் சத்தத்தை குறைக்குமாறு பணிவுடன் கேட்ட படகு இயக்குநரிடம், அந்தப் பெண் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாகவும், குரல் உயர்த்தி தன்னைச் சுற்றியிருந்த பயணிகளையும் அச்சுறுத்தத் தொடங்கியதாகவும் சாட்சிகள் தெரிவித்தனர். இதனையடுத்து படகு இயக்குநர் சுற்றுப்பயணத்தை நிறுத்தி கீழே இறங்குமாறு கேட்டுள்ளார்.

ஆனால் படகிலிருந்து இறங்கியவுடன் சம்பவம் மோசமடைந்தது. டிக்டோக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக தளங்களில் வைரலாகியுள்ள வீடியோக்களில், அந்தப் பெண் கோபத்துடன் பயணிகளிடம் கத்தி, பின்னர் பாலத்தின் மீது ஏறிச் சென்று, பெப்பர் ஸ்ப்ரே வைத்துப் படகில் இருந்த பயணிகள் மீது தெளிப்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இந்த தாக்குதலில், ஒரு சிறுவன் உட்பட எட்டு பேர் ரசாயன எரிச்சலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வீடியோவில் அந்தக் குழந்தை கண்களைத் தேய்த்து வலி காரணமாக அழுவதும், பெற்றோர் அவனை ஆறுதல் கூற முயல்வதும் காணப்படுகிறது.

இந்தியக் குடும்பம் தாக்குதலுக்கு இலக்கான காட்சிகளை சமூக தளங்களில் பலரும் பகிர்ந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல பயனர்கள் இதை “குழந்தை மீதான துஷ்பிரயோகம்” எனவும் “கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

சான் அன்டோனியோ காவல் துறை, பல பயணிகள் மிளகுத்தூள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. சம்பவத்திற்கு முன்பே அந்தப் பெண் மிளகுத்தூளை எடுத்துச் சென்றிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த அதிர்ச்சி சம்பவத்தால் நதி சுற்றுலா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.