சமூக வலைத்தளமான டிக்டாக்கில் சமீபமாக பெண்களின் மாதவிடாய் ரத்தத்தை முகத்தில் தடவி ‘ஃபேஸ் பேக்’ போடுவது போல வீடியோக்கள் வைரலாகி வருவது, மருத்துவ வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், இன்ஸ்டாகிராமிலும் சில மேற்கத்திய இன்ஃப்ளூயென்சர்கள் இந்த முறையைப் பரப்பி வருவதால், பயனர்கள் தவறான புரிதலில் சிக்குவார்களோ என்றும் மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஊடகமான நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட தகவலின்படி, ‘Menstrual Masking’ என அழைக்கப்படும் இந்த ட்ரெண்ட், சருமத்திற்கு பொலிவு தரும் எனக் கூறி பலர் பயன்படுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் சாரா சோல் என்ற பெண் 2024-ஆம் ஆண்டிலேயே இந்த முறையை அறிமுகப்படுத்தியிருந்தாலும், தற்போது இது அதிகளவில் பரவத் தொடங்கியுள்ளது.

வீடியோக்களில், ஸ்கின் கேர் முறையின் இறுதியில் பெண்கள் சில நிமிடங்கள் தங்களின் முகத்தில் மாதவிடாய் ரத்தத்தை தடவிக் கொள்கின்றனர். ஆனால், இந்த முறைக்கு மருத்துவ ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. எத்தனை நேரம், எவ்வளவு அளவு ரத்தம் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான தகவலும் தெளிவாக இல்லாததால், இதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து நிபுணர்கள் அச்சம் எழுப்புகின்றனர்.

இந்த ரத்தத்தில் ஸ்டெம் செல்கள், புரதங்கள், சைட்டோகைன்கள் உள்ளதால் சருமத்திற்கு நன்மை தரும் என சிலர் கூறினாலும், இதை ஆதரிக்கும் விஞ்ஞான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

முன்னதாக, அமெரிக்க தொழிலதிபர் கிம் கர்தாஷியன் PRP எனப்படும் ப்ளேட்லெட் அதிகமுள்ள பிளாஸ்மா மூலம் தயாரிக்கப்பட்ட ‘Vampire Facial’ மாஸ்க்கை பயன்படுத்தியதால் இது குறித்து விவாதம் ஏற்பட்டது. ஆனால் அந்த மாஸ்க் மருத்துவர்களால் கிருமி நீக்கம் செய்யப்பட்ட ரத்தத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ‘Menstrual Mask’ நேரடியாக மாதவிடாய் ரத்தத்தை பயன்படுத்துவதால், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று பரவக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, Staphylococcus aureus என்ற பாக்டீரியா சருமத்தில் ஊடுருவி தொற்றை ஏற்படுத்தும் தன்மை உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாலியல் நோய் உள்ளவர்கள் பயன்படுத்தும் ரத்தத்தின் மூலம் நோய் பரவுவதற்கும் வாய்ப்பு இருப்பதால், எந்த சூழலிலும் இப்படியான முறைகளை யாரும் பின்பற்ற வேண்டாம் என மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.