கொப்பல் மாவட்டம் கங்காவதி நகரில் 17 வயது பி.யூ. 2-ம் ஆண்டு படித்து வரும் சிறுமி ஒருவர் தனது தந்தையாலும், அவரது நண்பராலும் அநாகரிகமாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூலித்தொழிலாளியாக பணிபுரியும் சிறுமியின் தந்தைக்கு நீண்டநாள் மது அருந்தும் பழக்கம் இருந்தது. தினமும் மதுப்போதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டையிடுவது வழக்கமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தன்று, மதுபோதையில் வீடு திரும்பிய தந்தை, சிறுமியை வலுக்கட்டாயமாக குண்டம்மா முகாமில் வசிக்கும் தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சில நாட்கள் தங்கி இருக்கும்படி சிறுமியை கட்டாயப்படுத்தியுள்ளார். அந்த நேரத்தில், தந்தையின் நண்பர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அடுத்த நாள் வீடு திரும்பிய சிறுமி நடந்ததை தந்தையிடம் தெரிவித்தபோது, அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், “நான் என் நண்பருக்கே உன்னை திருமணம் செய்ய வைக்கப் போகிறேன்; இதை யாரிடமும் கூறினால் உன் அம்மாவை கொலை செய்து விடுவேன்” என்று மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்த சிறுமி அமைதியாக இருந்துள்ளார். பின்னர் தந்தையின் நண்பர் வீட்டிற்கு அடிக்கடி வந்து யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்த மனஉளைச்சலால் சிறுமி தற்கொலைக்கு முயன்றதாகவும், அப்போது அவளை அவளது தாய் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் தாய் விசாரித்தபோது, சிறுமி முழு விவரத்தையும் அவளிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, தாயின் உதவியுடன் சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தற்போது தலைமறைவாக உள்ள தந்தை மற்றும் அவரது நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர்.
