எர்ணாகுளம் மாவட்டம் தேவரா-கோந்துருத்து பகுதியில் சாக்கு மூட்டையில் பெண் பிணம் கிடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சம்பந்தப்பட்டதாக 61 வயது ஜார்ஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோந்துருத்துவைச் சேர்ந்த ஜார்ஜ், கடந்த 21-ம் தேதி அதிகாலை தனது வீட்டுக்கு வெளியே சுவரில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அருகில் சந்தேகத்துக்கிடமாக ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அப்போது அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு பணியாளர்கள் அந்த மூட்டையைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் ஒரு பெண்ணின் பிணம் இருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனே எர்ணாகுளம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பின்னர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஜார்ஜை எழுப்பி விசாரிக்க முயன்றபோது, அவர் முரண்பட்ட பதில்கள் கூறியதால் போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் ஜார்ஜ் ஒப்புக்கொண்டார்.
அவரின் வாக்குமூலம்: “எனக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். மகள் பாலாவில் வசிக்கிறார். அவரை பார்க்க 20-ந்தேதி மனைவியுடன் சென்றேன். அங்கிருந்து மனைவியை விட்டுவிட்டு நான் மட்டும் வீடு திரும்பும் போது விபசாரத்தில் ஈடுபடும் ஒரு பெண்ணை சந்தித்தேன். மது போதையில் இருந்த நான், அவளை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்தேன்.
பின்னர் பணம் கொடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கோபம் அடைந்த நான் இரும்புக் கம்பியால் அடித்ததில் அந்த பெண் உயிரிழந்தார். உடலை அகற்ற சாக்கு மூட்டை தேடினேன். அருகில் எவரும் கொடுக்காததால் கடையில் வாங்கி பெண்ணின் உடலை அதில் வைத்து வெளியே கொண்டு வந்து தூக்கி வீச முயன்றேன். முடியாததால் அங்கேயே போட்டுவிட்டு குடிபோதையில் தூங்கி விட்டேன்.” என்று ஜார்ஜ் போலீசில் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் ஜார்ஜை கைது செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் அடையாளம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
