ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2025 அரையிறுதிப் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி, வங்கதேச ‘ஏ’ அணியிடம் சூப்பர் ஓவரில் அடைந்த அதிர்ச்சித் தோல்வி இந்திய கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தோல்விக்கு அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மாவின் குழப்பமான முடிவே காரணம் எனக் கருதப்படுகிறது. போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்கும் சூப்பர் ஓவரில், தொடரின் நட்சத்திர வீரரும், அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான வைபவ் சூர்யவன்ஷிக்கு (15 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தவர்) பேட்டிங் செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அவருக்குப் பதிலாக கேப்டன் ஜிதேஷ் சர்மா, ரமந்தீப் சிங் மற்றும் அஷுடோஷ் சர்மா ஆகியோர் களமிறங்கினர். ஆனால், சூப்பர் ஓவரில் இந்திய அணி இரண்டு பந்துகளில் விக்கெட்டுகளை இழந்து பூஜ்ஜியம் ரன்களில் சுருண்டது.
இந்தத் தோல்விக்குப் பிறகு, அணியின் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, கேப்டன் ஜிதேஷ் சர்மாவின் முடிவால் மிகவும் விரக்தி அடைந்தது தெரிய வந்துள்ளது. ஜிதேஷ் சர்மா சூப்பர் ஓவரின் முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறியபோது, ஆவேசமடைந்த வைபவ் சூர்யவன்ஷி, கேப்டனைப் பார்த்து ஒரு ஆபாசமான வார்த்தையால் (திட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கேப்டன் ஜிதேஷ் சர்மா எடுத்த விபரீதமான முடிவினால், வங்கதேசம் ஒரு ‘வைடு’ பந்து மூலம் இலக்கை அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த முடிவுகள், ஜிதேஷ் சர்மாவின் தலைமைப் பண்பு குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவர் இந்திய அணியில் தக்கவைக்கப்படுவாரா என்ற விவாதமும் எழுந்துள்ளது.
