ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது காயம் அடைந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், கிரிக்கெட்டில் விளையாட ஐபிஎல் தொடர் வரை கூட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, எந்தவிதமான கடுமையான உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் கேட்ச் பிடிக்க முயன்றபோது தவறி விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. ஸ்கேன் சோதனையில் காயம் உயிருக்கே ஆபத்தானது என்று தெரிய வந்த நிலையில், உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், 3 மாதங்களுக்கு எந்தப் பயிற்சியும் செய்யக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால், நவம்பர் 30-ல் தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர், ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளை அவர் தவறவிட நேரிடும் என்று தெரிகிறது. காயத்தின் காரணமாக, துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக, தற்போது கேஎல் ராகுலை பிசிசிஐ தயார் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
3 மாதங்களுக்குப் பிறகு எடுக்கப்படும் யுஎஸ்ஜி சோதனையின் முடிவுகளைப் பொறுத்தே, அவர் பயிற்சியைத் தொடங்க முடியும் என்பதால், ஸ்ரேயாஸ் ஐயர் ஜூன் மாதம் நடக்கவுள்ள ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தான் இந்திய அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
