சென்னை: புழல் செக்ரடேரியட் காலனி பகுதியில் இரவு 7 மணியளவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட பெண் புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஹெல்மெட் அணிந்து, முகத்தை துணியால் மறைத்து பைக்கில் வந்த நபர் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், பாலியல் சீண்டலில் ஈடுபட்டது 10-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் என்றும், அவன் தனது தந்தையின் பைக்கில் சுற்றி வந்து இந்தச் செயலில் ஈடுபட்டதும் அம்பலமானது. இதனையடுத்து, அச்சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
