சென்னை, ஆவடி அடுத்த கோவர்த்தனகிரி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சதீஷ் (41) – மீனா (38) தம்பதியினரின் மகன் ஹரிஹரன் (13), அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான்.
சமீபத்தில் சதீஷின் உறவினர் பெண் பிரசவத்திற்காக வந்திருந்தபோது, மேல் மாடியில் உள்ள படுக்கை அறையில் புடவையால் தொட்டில் கட்டப்பட்டிருந்தது. அந்தப் பெண் ஆந்திராவுக்குச் சென்ற பின்னரும் தொட்டில் அகற்றப்படாமல் அப்படியே இருந்தது.
வழக்கமாக அந்தத் தொட்டிலில் சிறுவன் ஹரிஹரன் விளையாடி வந்துள்ளான். இந்நிலையில், நேற்று முன்தினம் மனைவி மீனாவும் மகளும் உறவினர் வீட்டிற்குச் சென்றபோது, வழக்கம் போல ஹரிஹரன் தொட்டிலில் விளையாடி இருக்கிறான்.
தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, புடவை முறுக்கிக்கொண்டு சிறுவனின் கழுத்தில் சிக்கி இறுக்கியதில் அவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளான். சிறிது நேரம் கழித்து வீட்டிற்குத் திரும்பிய மீனா, மகனைத் தேடியபோது மாடியில் உள்ள அறையில் புடவை கழுத்தில் இறுக்கிய நிலையில் மயங்கிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாகக் கத்தியால் புடவையை அறுத்துச் சிறுவனை மீட்ட மீனா, ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஹரிஹரன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். குழந்தைக்காகக் கட்டப்பட்ட தொட்டிலில் சிறுவன் சிக்கிக் கொண்டு உயிர் இழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
