மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பிம்பர்கேட் கிராமத்தில், சிறுத்தையின் அச்சுறுத்தல் மிகக் கடுமையாக உள்ளதால், கிராம மக்கள் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள வினோதமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். வெறும் ஒரு மாத காலத்திற்குள் 5 வயதுச் சிறுமி, 82 வயது மூதாட்டி மற்றும் 13 வயது சிறுவன் உட்பட மூவர் சிறுத்தைக்கு பலியாகியுள்ளனர். இதனால் பயந்துபோன கிராம மக்கள், விவசாயப் பணிகளுக்குச் செல்லும்போது கழுத்தில் கூர்மையான இரும்புக் காலர்களை அணிந்துகொண்டு செல்கின்றனர்.
“விவசாயமே எங்களின் ஒரே வருமானம். பயத்தில் வீட்டிலேயே இருக்க முடியாது. சிறுத்தைகள் எந்த நேரத்திலும் வயல்களுக்குள் வந்துவிடுகின்றன” என்று கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், தனது தாயும் ஒரு மாதத்திற்கு முன் சிறுத்தைக்கு பலியானதாக வித்தல் ரங்கநாத் ஜாதவ் என்ற கிராமவாசி கூறியுள்ளார். சிறுத்தையின் தொடர்ச்சியான தாக்குதலால் அப்பகுதி மக்களின் தினசரி வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Pune, Maharashtra | Amid a surge in leopard attacks across several villages in Pune, residents are taking unusual precautions to protect themselves. Local residents in Pimperkhed village, Shirur tahsil, Pune, are wearing collars and belts with sharp iron nails around… pic.twitter.com/8kCeuOcL6U
— ANI (@ANI) November 22, 2025
பாதுகாப்புக்காக மக்கள் கூட்டமாகவே விவசாயம் செய்யச் செல்கின்றனர். இந்த அச்சத்தின் காரணமாகப் பள்ளி நேரங்களை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாற்றவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சமூகப் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதற்கிடையில், கடந்த நவம்பர் 5 ஆம் தேதி, வனத்துறையும் மீட்புக் குழுவும் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், கடந்த 20 நாட்களில் மூன்று பேரைக் கொன்ற நரமாமிசச் சிறுத்தை ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொல்லப்பட்ட அந்தச் சிறுத்தையின் உடல் கிராம மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
