குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான கனைலால் கான்ட்ராக்டர் (82), போலி ஆவணங்கள் தயாரித்து, குடும்பச் சொத்தை அபகரித்த வழக்கில் சூரத் குற்றப்பிரிவு போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். இவர், தனது மறைந்த சகோதரர் ஹேமந்த்பாய் உடன் கூட்டாகக் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.

ஹேமந்த்பாயின் மனைவி நயனாபென் கடந்த ஆண்டு அளித்த புகாரில், கனைலால் தனது கணவர் மற்றும் அவரது கையெழுத்துகளைப் போலியாகப் போட்டு, ஒரு போலி அதிகாரப் பத்திரத்தைத் தயாரித்ததாகவும், அதன் மூலம் நிறுவனத்தின் கூட்டுச் சொத்தை அபகரித்து, ஒரு நிதி நிறுவனத்திடம் இருந்து ரூ.2.92 கோடியை அடமானக் கடனாகப் பெற்று, அதைத் தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

வாங்கிய கடனில் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்தாததால், நிதி நிறுவனம் மற்ற பங்குதாரரான நயனாபென்னுக்கு நோட்டீஸ் அனுப்பியபோது, இந்தக் கடும் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இந்த மோசடி வழக்கில் கைது நடவடிக்கையைத் தவிர்க்க கனைலால் கான்ட்ராக்டர், சூரத் மாவட்ட நீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை சென்று முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி, அவர் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தினார். ஆனால், மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட போலி ஆவணங்களைத் திருப்பி ஒப்படைக்கத் தவறியதால், அவருக்கு வழங்கப்பட்டிருந்த சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சூரத் குற்றப்பிரிவின் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.