ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2025 அரையிறுதிப் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி, வங்கதேச ‘ஏ’ அணியிடம் சூப்பர் ஓவரில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது. வங்கதேசம் நிர்ணயித்த 194 ரன்களைத் துரத்திய இந்திய அணி, கடைசிப் பந்தில் 3 ரன்கள் எடுத்து ஸ்கோரைச் சமன் செய்து போட்டியைச் சூப்பர் ஓவருக்குக் கொண்டு சென்றது.
ஆனால், சூப்பர் ஓவரில் இந்திய அணி ஒரு ரன் கூட எடுக்காமல் கேப்டன் ஜிதேஷ் சர்மா, அஷுடோஷ் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. இந்தப் படுதோல்விக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது, அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷியை (15 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தவர்) பேட்டிங் செய்ய அணி நிர்வாகம் அனுமதிக்காததுதான்.
அதிரடி ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி வெளியே இருந்த நிலையில், கேப்டன் ஜிதேஷ் சர்மா, ரம்தீப் சிங் மற்றும் அஷுடோஷ் சர்மா ஆகியோர் பேட்டிங் செய்ய களமிறங்கிய முடிவை ரசிகர்கள் கடுமையாகச் சாடினர். இந்தப் போட்டிக்குப் பிறகு விளக்கம் அளித்த கேப்டன் ஜிதேஷ் சர்மா, “வைபவ் மற்றும் பிரியான்ஷ் இருவரும் பவர்-பிளேயில் ஆடுவதில் திறமையானவர்கள்.
ஆனால், இறுதி ஓவர்களில் என்னாலும், அஷு மற்றும் ரமன்தீப் ஆகியோராலும் மட்டுமே சிக்ஸர்கள் அடிக்க முடியும். எனவே, இது அணியின் மற்றும் என்னுடைய முடிவாகும்” என்று தெரிவித்தார். எனினும், சூப்பர் ஓவர் தோல்விக்குப் பிறகு ஏமாற்றமடைந்த நிலையில் வைபவ் சூர்யவன்ஷி இருந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, கேப்டனின் இந்த முடிவுக்கு எதிராகப் பல ரசிகர்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தினர். வங்கதேசம் ஒரு வைடு பால் மூலமாகவே இலக்கை எட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
