ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2025 அரையிறுதிப் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி, வங்கதேச ‘ஏ’ அணியிடம் சூப்பர் ஓவரில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது. வங்கதேசம் நிர்ணயித்த 194 ரன்களைத் துரத்திய இந்திய அணி, ஸ்கோரைச் சமன் செய்து போட்டியைச் சூப்பர் ஓவருக்குக் கொண்டு சென்றது.

ஆனால், சூப்பர் ஓவரில் இந்திய அணி ஒரு ரன் கூட எடுக்காமல் கேப்டன் ஜிதேஷ் சர்மா, அஷுடோஷ் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. ஐசிசி விதிப்படி இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததால், சூப்பர் ஓவர் முடிவுக்கு வந்தது.

“>

 

இந்தப் படுதோல்விக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது, அணியின் அதிரடி வீரரும், 253.33 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் அடித்தவருமான வைபவ் சூர்யவன்ஷியை பேட்டிங் செய்ய அணி நிர்வாகம் அனுமதிக்காததுதான். ரசிகர்கள் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.

அதிரடி ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷியைப் புறக்கணித்துவிட்டு, கேப்டன் ஜிதேஷ் சர்மா, அஷுடோஷ் சர்மா மற்றும் ரம்தீப் சிங் ஆகியோரைப் பேட்டிங் செய்ய அனுப்பிய முடிவை ரசிகர்கள் கடுமையாகச் சாடினர். “வைபவ் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரை ஏன் சூப்பர் ஓவருக்கு அனுப்பவில்லை? இது கோச் சுனில் ஜோஷி மற்றும் கேப்டன் ஜிதேஷ் சர்மாவின் முட்டாள்தனமான முடிவாகும்” என்று சமூக ஊடகங்களில் ரசிகர்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

“>

 

“வைபவ் சூர்யவன்ஷி இதுவரை ஒவ்வொரு போட்டியிலும் இந்தியாவை காப்பாற்றியவர். இவரை சூப்பர் ஓவரில் அனுப்பாமல் இருக்க யார் முடிவு எடுத்தது? அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்” என்று ஒரு பயனர் தனது கோபத்தைப் பதிவு செய்துள்ளார். ரிப்பன் மொண்டல் பந்துவீச்சில் ஜிதேஷ், அஷுடோஷ் இருவரும் அவுட்டான நிலையில், சுயாஷ் சர்மாவின் ஒரு ‘வைடு’ பால் மூலம் வங்கதேசம் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.