இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, இங்கிலாந்து வீரர் மொயின் அலியால் தான் கேலி செய்யப்பட்ட சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு இங்கிலாந்து இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் செய்தபோது, மொயின் அலிக்கு ‘ஷார்ட் பால்’  ஆடுவது பலவீனம் என்றும், இரண்டு ஃபீல்டர்களைப் பின்னால் நிறுத்திப் பொறி அமைத்தால் அவரை வீழ்த்தலாம் என்றும் சோப்ரா தனது ஆய்வில் சுட்டிக்காட்டினார்.

சோப்ராவின் இந்தக் கருத்து மொயின் அலிக்குப் பிடிக்கவில்லை. அதே தொடரில் சென்னையில் சதம் அடித்த மொயின் அலி, சோப்ராவைக் கேலி செய்யும் விதமாக, அவரது மோசமான கிரிக்கெட் புள்ளிவிவரங்களைச் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்! இதற்கு பதிலளித்த சோப்ரா, “நான் வர்ணனையாளராகச் செய்த ஆய்வில் எந்தத் தவறும் இல்லை. என் புள்ளிவிவரங்கள் மோசமானவை என்று வேண்டுமானால் சொல்லலாம்” என்று கூலாகப் பதிலளித்தார்.

ஆகாஷ் சோப்ராவின் பகுப்பாய்வு அடுத்த நாளே நிரூபணமானது. இஷாந்த் சர்மா வீசியபோது, இந்தியா ஃபீல்டர்களைப் பின்னால் வைத்துப் பவுன்சர்களை வீச, மொயின் அலி அதில் ஒரு பவுண்டரி அடித்த சிறிது நேரத்திலேயே அதே பொறியில் சிக்கி ஆட்டமிழந்தார்.

“என் ஆய்வு சரியானது என்று உணர்ந்தேன்” என்று சோப்ரா கூறினார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மொயின் அலியே சோப்ராவிடம் வந்து, “மன்னிக்கவும். நான் அப்படி எதிர்வினையாற்றியிருக்கக் கூடாது. நான் சொன்னது தவறு” என்று கூறி மன்னிப்புக் கோரியதாகவும் ஆகாஷ் சோப்ரா வெளிப்படுத்தினார்.