மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகாணி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான மணிகண்டன் என்பவருக்கும், உடன் பணிபுரிந்த கொக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான பாரதிராஜா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இருவரும் ஒன்றாகப் பணம் செலவழித்துச் சுற்றித் திரிந்த நிலையில், இருவரும் பல்வேறு திருமணமான பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், இருவருக்கும் இடையே பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரச்சினை முற்றியுள்ளது. அப்போது, மணிகண்டன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஒரு பெண்ணுடன் பாரதிராஜாவும் தொடர்பு வைத்திருந்தது மணிகண்டனுக்குத் தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், பாரதிராஜாவைத் தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசியதுடன், பார்க்கும் இடங்களில் எல்லாம் அவமானப்படுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்குச் சென்ற பாரதிராஜா, நண்பன் மணிகண்டனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
திட்டத்தின்படி, கடந்த நவம்பர் 7ஆம் தேதி இரவு மணிகண்டனை மது அருந்த அழைத்துச் சென்ற பாரதிராஜா, தனது நண்பர்களான விக்னேஸ்வரன் மற்றும் மதன்ராஜ் ஆகியோருடன் ஆவியூர் தனியார் நிறுவனம் எதிரே ஒரு காட்டுப் பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது மீண்டும் அந்தப் பெண்ணைக் குறித்து மணிகண்டன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாரதிராஜா, மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனைச் சரமாரியாகத் தாக்கி, கொலை செய்து தலையைத் துண்டித்துள்ளார்.
பின்னர், சடலத்தை பாரதிராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கூடக்கோவில் அருகே உள்ள டி.கொக்குளம் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் அருகில் வீசிச் சென்றுள்ளனர். மேலும், அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசாமல் இருக்கவும், யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்கவும் சடலத்தின் மீது கல் வைத்ததுடன், அப்பகுதியில் கோழி கழிவுகள் மற்றும் இறந்த நாய் ஒன்றையும் போட்டுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த ஆவியூர் மற்றும் கூடக்கோவில் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் தலை இல்லாத மணிகண்டனின் உடலை மீட்டனர். மேலும், கொலை செய்த பாரதிராஜா, விக்னேஸ்வரன், மதன்ராஜ் ஆகியோரைக் கைது செய்து, துண்டிக்கப்பட்ட தலையைக் கைப்பற்றினர்.
