சீனாவில் நடைபெற்ற வன உயிர்வாழும் போட்டி ஒன்றில் கலந்துகொண்ட சாவோ டிஷூ என்ற 25 வயதுப் பெண், 35 நாட்கள் காட்டில் வாழ்ந்ததன் மூலம் வெண்கலப் பதக்கம் வென்றதுடன், தனது எடையை 14 கிலோ குறைத்து சாதனை படைத்துள்ளார். கிழக்குச் சீனாவில் உள்ள ஷேஜியாங் மாகாணத் தீவு ஒன்றில் அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில், அவர் நவம்பர் 5-ஆம் தேதி வரை 35 நாட்கள் சவாலை எதிர்கொண்டார்.

ஆரம்பத்தில் 85 கிலோ இருந்த அவரது எடை, போட்டி முடிவில் 71 கிலோவாக குறைந்தது. 40 டிகிரி வெப்பம், கைகளில் ஏற்பட்ட சிராய்ப்புகள், கால்களில் பூச்சிக் கடிகள் மற்றும் கடுமையான வெயிலினால் ஏற்பட்ட தோல் பாதிப்பு எனப் பல சவால்களைச் சந்தித்த போதும், எடை குறைந்தது பெரிய சாதனை என்று சாவோ டிஷூ குறிப்பிட்டுள்ளார். 35 நாட்கள் சவாலை முடித்ததற்காக அவருக்குப் பரிசாக 7,500 யுவான் ( இந்திய மதிப்பில் சுமார் ₹88,608) ரொக்கம் கிடைத்தது.

சாவோ டிஷூ தனது எடை குறைப்புக்கு முக்கியக் காரணம், காட்டில் அவர் சேகரித்த புரதம் நிறைந்த உணவுப் பொருட்கள்தான் என்று விளக்கினார். அவரது உணவில் நண்டு, கடல் அர்ச்சின் மற்றும் அபலோன் போன்ற கடல் உணவுகள் இருந்தன. மேலும், 35 நாட்களில் அவர் சுமார் 50 எலிகளை வேட்டையாடி, சமைத்துச் சாப்பிட்டதாகவும், எலிகள் மிகவும் சுவையாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 4-ஆம் தேதி தீவை ஒரு புயல் தாக்கியதால், தனது இலக்குகளை நிறைவேற்றிவிட்டதாகக் கூறி அவர் போட்டியில் இருந்து விலகினார். போட்டியில் இன்னும் நீடிக்கும் இரண்டு ஆண் போட்டியாளர்கள் 50,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ₹6,20,168) முதல் பரிசிற்காகப் போராடி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், ஹுனான் மாகாணத்தில் உள்ள செவன் ஸ்டார் மலைப் பகுதியில் நடைபெறும் மற்றொரு பிரபலமான உயிர்வாழும் போட்டியில், அதிக நாட்கள் தாங்குபவருக்கு 2,00,000 யுவான் (சுமார் ₹24.8 லட்சம்) பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.