கர்நாடக மாநிலம், கதக் மாவட்டம், பெட்டகேரி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சாய்ராம், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தக் கிராமத்தில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லாமல் கிராம மக்கள் நீண்ட காலமாகச் சிரமப்பட்டு வருகின்றனர். சாலை வசதி இல்லை, குடிநீர் சரியாகக் கிடைப்பதில்லை போன்ற குறைகள் நீடித்து வருவதால், கிராமத்தின் நிலைமையை மாற்ற வேண்டும் என்று இந்தச் சிறுவன் முடிவெடுத்தார்.

இந்தச் சூழலை மாற்றும் விதமாக, சிறுவன் சாய்ராம், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். தனது கிராமத்தின் அவல நிலையை அதில் சுட்டிக்காட்டி, அடிப்படை வசதிகளைச் செய்து தரக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சிறுவனின் விழிப்புணர்வுமிக்கச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சிறுவன் சாய்ராம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், “எங்கள் பெட்டகேரி கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. மழை நேரங்களில் சாலை முழுவதும் சேறும், சகதியுமாகக் காணப்படுகிறது. மேலும், நாங்கள் பள்ளி முடிந்து வந்ததும் அந்த சேற்றில் தான் விளையாடும் நிலை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குடிநீர் சரியாகக் கிடைப்பதில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளான். எனவே, தங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தி, தான் எதிர்நோக்கும் பிரச்சினையைத் துணிச்சலாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த 8-ம் வகுப்பு மாணவனின் நெஞ்சைத் தொடும் செயலை அப்பகுதி மக்கள் ஒருமித்த குரலில் பாராட்டி வருகின்றனர்.