பெங்களூருவின் சாந்தி நகர் பகுதியில், தனியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு நபரை, மூன்று பைக்குகளில் வந்த நபர்கள் வழிமறித்துத் தாக்கி, அவரிடம் இருந்த பொருட்களைப் பறித்துச் சென்ற கொடூரச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 15ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படும் இந்தக் கொள்ளை சம்பவம் குறித்த வீடியோவை, பெங்களூரு மத்தியத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.சி. மோகன் அவர்கள் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு, உடனடியாகக் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அந்த வீடியோவில், இருசக்கர வாகனத்தில் தனியாகச் சென்றவரைப் பின்தொடர்ந்து வந்த கொள்ளையர்கள், முதலில் சாவியைப் பறித்து அவரை நிறுத்தி, பின்னர் ஒருவன் வாகனத்தில் இருந்து இறங்கி உடல்ரீதியாகத் தாக்குகிறார்.

தாக்குதலுக்குப் பிறகு, தாக்கப்பட்டவரின் சட்டைப் பைகளில் இருந்த விலை உயர்ந்த பொருட்களைப் பறித்துச் சென்றது அந்தக் கும்பல். இந்தப் பகிரங்கமான கொள்ளைச் சம்பவம், பெங்களூருவில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.