ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ‘ஏ’ அணிகள் மோதிய ஆட்டத்தில், நடுவரின் முடிவால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் ‘ஏ’ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் மாஸ் சதக்கத் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

பாகிஸ்தான் இன்னிங்ஸின் 10வது ஓவரில், சதக்கத் அடித்த பந்தை பவுண்டரி எல்லை அருகே நின்றிருந்த இந்திய வீரர் நேஹல் வதேரா ஓடிச் சென்று பிடித்துள்ளார். கேட்சைப் பிடித்தபோது, வதேரா சமநிலை தவறி பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்று விட்டதால், உடனடியாகப் பந்தை உள்ளே இருந்த நமன் தீரிடம் வீச, அவரும் கேட்சைப் பிடித்தார்.

இந்திய அணி கொண்டாட்டத்தில் இருந்தபோது, நடுவர் முடிவை மூன்றாவது நடுவருக்குப் பரிந்துரைத்தார். ஐசிசி-யின் புதிய விதிப்படி (அக்டோபர் 2025 முதல் அமல்), ஒரு பீல்டர் பவுண்டரிக்கு வெளியே இருந்து பந்தை உள்ளே வீசிய பிறகு, உடனடியாக மைதானத்திற்குள் வந்திருக்க வேண்டும்.

இந்த விதிமுறைப்படி, நேஹல் வதேரா பவுண்டரி கோட்டைத் தாண்டிய பிறகு, மீண்டும் மைதானத்திற்குள் வராததால், நடுவர் சதக்கத்தை ‘நாட் அவுட்’ என்று அறிவித்தார்.

இதனால், இந்திய கேப்டன் ஜிதேஷ் சர்மா நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட சதக்கத், 79 ரன்கள் எடுத்து, பாகிஸ்தானின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.