ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அமைந்துள்ள கலண்டோ செம்பு சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், 32 சுரங்கத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுரங்கத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததே இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. சுற்றுச்சுவர் இடிந்தபோது பீதியடைந்த தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது, ஒருவர் மீது ஒருவர் விழுந்ததாலும், நெரிசலாலும் பலி எண்ணிக்கை அதிகரித்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விபத்தில் அதிகாரப்பூர்வமாக 32 பேர் இறந்ததாகக் கூறப்பட்டாலும், உண்மையான இறப்பு எண்ணிக்கை 40-ஐ தாண்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மின்னணு வாகனங்கள் மற்றும் பிற சாதனங்களுக்கான லித்தியம்-அயன் பேட்டரிகளைத் (தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய கனிமமான கோபால்ட்டைகாங்கோ நாடு அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. இதன் காரணமாகவே, உலகின் பிற நாடுகளைக் காட்டிலும் காங்கோ சுரங்கங்கள் மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், இந்த முக்கியமான கனிம உற்பத்தியில் 80 சதவீதத்திற்கும் மேலானதை சீன நிறுவனங்களே தற்போது கட்டுப்படுத்துகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து தொடர்பாகக் காங்கோ அரசு விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், சுரங்கப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.