திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கோணாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி இந்துமதி. சமீபத்தில் கார் ஓட்டுவதற்குக் கற்றுக்கொண்ட ராஜா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் புதிதாக ஒரு கார் வாங்கியுள்ளார். இந்நிலையில், ராஜா நேற்று காலை தன் குடும்பத்தினருடன் காரில் ஒரு கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, தங்கள் வீட்டின் அருகே காரைப் பார்க்கிங் செய்வதற்காக, தன் மனைவி இந்துமதியை காரின் பின்னால் நின்று வழிகாட்டுமாறு கூறியுள்ளார். அவர் வழிகாட்ட, ராஜா காரை ரிவர்ஸ் எடுத்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக, கார் இந்துமதியின் மீது மோதி, சுவருக்கும் காருக்கும் இடையில் சிக்கி அவர் படுகாயம் அடைந்தார்.

கார் மோதிய விபத்தில் உடல் நசுங்கி படுகாயமடைந்த இந்துமதியை, அவரது குடும்பத்தினர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று இந்துமதி உயிரிழந்தார்.

கார் ஓட்டக் கற்றுக்கொண்டு புதிதாக வாகனம் வாங்கிய நிலையில், பார்க்கிங்கின் போது ஏற்பட்ட இந்த எதிர்பாராத விபத்தில் மனைவி உயிரிழந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக ஆவடி போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.