திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய சரஸ்வதி என்ற பெண்மணி, தன் வீட்டில் தனியாக இருந்தபோது, தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, கம்மல் மற்றும் செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தக் கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (26) என்பவர் கடைசியாக சரஸ்வதியின் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.

போலீசார் அவரைத் தேடிக்கொண்டிருந்தபோது, திருடப்பட்ட சரஸ்வதியின் செல்போன் சிக்னல், சென்னை அமைந்தகரை பகுதியில் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார், ஒரு ஆட்டோவில் அமர்ந்து அந்தத் திருடிய செல்போனில் தன் காதலியிடம் பேசிக்கொண்டிருந்த வெங்கடேசனை மடக்கிப் பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், சரஸ்வதியைக் கொன்று நகை மற்றும் செல்போனைத் திருடியதை வெங்கடேசன் ஒப்புக்கொண்டார். உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.