மகாராஷ்டிரா மாநிலம், வசை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், 12 வயதுச் சிறுமி ஒருவர் பள்ளிக்கு 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காகத் தனது ஆசிரியரால் 100 முறை சிட்-அப்ஸ் எடுக்கச் சொல்லி கடுமையாகத் தண்டிக்கப்பட்டதில் உயிரிழந்த இதயத்தை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. ஆறாம் வகுப்பு படித்து வந்த காஜல் கவுட் என்ற அந்த மாணவி, கடந்த நவம்பர் 8ஆம் தேதி வசை பகுதியில் உள்ள ஸ்ரீ ஹனுமந்த் வித்யா உயர்நிலைப்பள்ளியில் இந்தத் தண்டனையைப் பெற்றுள்ளார்.
ஆசிரியர், காஜல் உட்படச் சில மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிறுத்தி, தாமதமாக வந்ததற்காக இந்தத் தண்டனையை அளித்துள்ளார். மற்ற சில மாணவர்கள் 20 சிட்-அப்களுக்குப் பிறகு நிறுத்திவிட்டாலும், காஜல் சிரமம் மற்றும் வலியுடன் 100 சிட்-அப்களை முழுவதுமாகச் செய்து முடித்துள்ளார். இந்தக் கடுமையான தண்டனைக்குப் பிறகு மாணவி காஜலின் உடல்நிலை மறுநாள் மோசமடையத் தொடங்கியது. முதலில் வசை பகுதியில் உள்ள ஆஸ்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் நிலைமை மோசமானதால் நலசோபரா விஜயலட்சுமி மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக JJ மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார்.
இருப்பினும், மருத்துவ முயற்சிகள் பலன் அளிக்காமல், குழந்தைகள் தினத்தன்று அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கோரச் சம்பவத்தையடுத்து, பள்ளி நிர்வாகத்தின் அங்கீகாரம் குறித்தும் தற்போது சந்தேகங்கள் எழுந்துள்ளன. பள்ளிக்கு 8ஆம் வகுப்பு வரை மட்டுமே அங்கீகாரம் இருந்தும் 10ஆம் வகுப்பு வரை நடத்தியிருப்பது சட்டவிரோதச் செயல் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
