ஹரியானா மாநிலம் ரேவாரி அருகே உள்ள ஒரு குடியிருப்பில், காதல் திருமணம் செய்துகொண்ட கணவன், மனைவி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட இதயத்தைப் பிளக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேசம், சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது ராஜ்குமார் மற்றும் அவரது 22 வயது மனைவி ஹாவி ஆகியோரே உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில், வேலை தேடி ரேவாரிக்கு வந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இருவரும் தங்கள் அறையில் உள்ளே தாழிட்ட நிலையில் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்குவதைக் கண்ட அவரது அண்ணன் மகேந்திரா, அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள், அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று இருவரது சடலங்களையும் கைப்பற்றினர். அப்போது அங்கு இருந்து கடிதம் ஒன்றை அவர்கள் கைப்பற்றினர். அதில், “எங்களது சடலங்களை எங்கள் பெற்றோர்கள் வந்தால் கொடுக்கவும், இல்லையேல் இங்கேயே தகனம் செய்துவிடவும். எங்களது பொருட்களை அண்ணனிடம் ஒப்படைக்கவும்” என்று எழுதப்பட்டிருந்தது.
மேலும், ராஜ்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சகோதரர்களே, அனைவருக்கும் கடைசி குட் நைட்” என்று பதிவிட்டிருந்ததும் தெரிய வந்தது. காவல்துறையினர் இரு சடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தக் காதல் தம்பதி தற்கொலை செய்துகொண்டதற்கான உண்மையான காரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
