நடிகர் ஆர். மாதவன் அவர்கள், ஒரு 91 வயது சிங்கப்பூர் முதியவர் தினசரி 12 மணி நேர வேலைப் பார்ப்பதைக் காட்டும் காணொளியைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டதோடு, அதனைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்ததால், இச்சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. ‘3 இடியட்ஸ்’ திரைப்படத்தின் நடிகர் மாதவனை வெகுவாகக் கவர்ந்த இந்தக் காணொளியை, ஆஸ்திரேலியப் பதிவர் ஜேடன் லெயங் என்பவர் சிங்கப்பூரில் படமாக்கியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Jaden Laing (@jadentysonlaing)

பொது கழிப்பறை ஒன்றில் பணி செய்துகொண்டிருந்த அந்த முதியவருக்கு மதிய உணவிற்காகப் பணம் அளித்த லெயங், அவரிடம் நலம் விசாரித்துள்ளார். அப்போது, “உங்கள் வயது என்ன?” என்று கேட்டதற்குப் பதிலாக, அந்தக் கேள்வியைத் தவறாகப் புரிந்துகொண்ட முதியவர், “91 வயது ஆகிறது” என்று பதிலளித்ததைக் கேட்டுப் பதிவர் லெயங் அதிர்ச்சியடைந்துள்ளார்.

91 வயதிலும் அந்த முதியவர் இடைவிடாது உழைப்பதைப் பார்த்த லெயங், “நீங்கள் இன்னும் வேலை செய்கிறீர்கள், நீங்கள் ஒரு சிறந்த மனிதர்!” என்று பாராட்டியதோடு, “நீங்கள் எத்தனை மணிக்கு வேலையை முடிப்பீர்கள்?” என்று கேட்டுள்ளார். அதற்கு முதியவர், “இரவு 7 மணி” என்று சாதாரணமாகப் பதிலளித்தார். மேலும், “எத்தனை மணி நேரம் வேலை செய்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு, “12 மணி நேரம்” என்று அவர் பதிலளித்தது லெயங்கிற்கு மேலும் வியப்பை அளித்தது.

இதைத்தொடர்ந்து, “இவ்வளவு ஆரோக்கியமாக இருக்க உங்கள் உணவுமுறை என்ன? உடற்பயிற்சி செய்கிறீர்களா?” எனக் கேட்டதற்கு, அந்த முதியவர், “சாதாரண உணவுதான், ஒருபோதும் உடற்பயிற்சி செய்ததில்லை” என்று சிரித்தபடி பதிலளித்துள்ளார். இந்தக் காணொளியைப் பகிர்ந்த நடிகர் மாதவன், அந்த முதியவரின் உறுதியான மனப்பான்மையைப் பாராட்டியதுடன், பலருக்கும் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.