மக்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் நடிகர் விஜய்யின் இறுதிப் படமான ‘ஜனநாயகன்’ பாக்ஸ் ஆபிஸ் வசூலைத் தாண்டி வேறொரு சுவாரஸ்யமான காரணத்திற்காக தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. படத்தில் இடம்பெற்ற ஒரு சிறிய பின்னணிக் காட்சி, உலகளவில் புகழ்பெற்ற கே-பாப் ரசிகர்களை இணையத்தில் மோதவிட்டுள்ளது.

எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், விஜய்யின் கடைசிப் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் விஜய், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே மற்றும் பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு உணர்ச்சிகரமான காட்சியில், மமிதா பைஜுவின் (விஜி) அறைக்குள் நடிகர் விஜய் பேசுவது போன்றும், பின்னர் பூஜா ஹெக்டே உள்ளே வருவது போன்றும் செட் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், படத்தின் சென்டிமென்ட் காட்சியை விடுத்து, ரசிகர்களின் கவனம் முழுவதும அந்த அறையின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த கே-பாப் போஸ்டர்களின் மீதே திரும்பியுள்ளது.

சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் கிளிப் வைரலானதும், ரசிகர்கள் உடனடியாக அந்தப் பகுதியை ஜூம் செய்து ஆராயத் தொடங்கினர். சுவர்களில் உள்ள போஸ்டர்களில் பிரபல கொரிய இசைக்குழுவான ‘பிடிஎஸ்’  மற்றும் ‘என்கைபன்’  போன்ற குழுக்களின் புகைப்படங்கள் இருப்பதாகக் கூறி ரசிகர்கள் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.

குறிப்பாக, பிடிஎஸ் குழுவின் தனிப்பட்ட போஸ்டர்கள் உள்ளதா அல்லது அனைத்து உறுப்பினர்களின் படங்களும் இருக்கிறதா என்பதில் பிடிஎஸ் மற்றும் என்கைபன் ரசிகர்களுக்கு இடையே இணையத்தில் கடுமையான வாதங்கள் எழுந்துள்ளன. சில ரசிகர்கள் ‘பிளாக்பிங்க்’ குழுவின் படங்களும் மூலையில் இருப்பதாகக் கூறி ஸ்கிரீன்ஷாட்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இளம் வயதுக் கதாபாத்திரத்தின் அறையை யதார்த்தமாகக் காட்ட வேண்டும் என்பதற்காகக் கலை இயக்குநர் இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தாலும், படக்குழு தரப்பிலிருந்து இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.

ஒரு சில சுவரொட்டிகள் சினிமா வரலாற்றில் இவ்வளவு பெரிய விவாதத்தை ஏற்படுத்துமா எனத் திரைத்துறையினர் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.