இந்தோனேசியாவில் நடந்த ஒரு திடுக்கிடும் உண்மைச் சம்பவம், திரைப்படக் காட்சியைப் போலவே பயங்கரமானதாக அமைந்துள்ளது. ஆற்றில் படகில் சென்றுகொண்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரை, ஒரு ராட்சத மலைப்பாம்பு திடீரெனத் தண்ணீருக்குள் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹெரு என்ற அந்த வழிகாட்டி, படகில் உள்ள சிலருடன் ஆற்றின் நடுவில் பயணித்தபோது, தண்ணீரில் மிதந்து வந்த ஒரு பொருளைப் பார்க்க அருகில் குனிந்துள்ளார்.

அப்போது, அது ஒரு ஆபத்தான வேட்டையாடும் உயிரினம் என்று அவர் உணரவில்லை. கண் இமைக்கும் நேரத்தில், மிகப் பெரிய மலைப்பாம்பு ஒன்று வேகமாகத் தண்ணீரில் இருந்து வெளிப்பட்டு, ஹெருவைப் பிடித்துப் படகில் இருந்து ஆற்றிற்குள் இழுத்துச் சென்றுள்ளது. இதைக் கண்ட அனைவரும் திகைத்துப் போயினர். அந்த மலைப்பாம்பு முதலில் ஹெருவின் வயிற்றைச் சுற்றியும், பின்னர் மெதுவாக அவரது கழுத்து மற்றும் கைகளைச் சுற்றியும் இறுக்கியுள்ளது. தண்ணீரில் உயிர் பிழைக்க ஹெரு கடும் போராட்டம் நடத்தியுள்ளார்.

படகில் இருந்த மற்றவர்கள் பயத்தில் அலறினர், பின்னர் துணிச்சலுடன் அவரை காப்பாற்றத் தண்ணீரில் குதித்தனர். ஒருவர் பாம்பின் தலையையும், மற்றவர் அதன் வாலையும் பிடித்து ஹெருவை விடுவிக்க கடும் முயற்சி செய்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அவர்கள் ஹெருவை மலைப்பாம்பின் பிடியில் இருந்து மீட்டனர். அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.

பின்னர், வேறு யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்க அந்தப் பாம்பை அவர்கள் பிடித்து, படகில் வைத்துப் புகைப்படங்கள் எடுத்துவிட்டு, அதன்பின்னர் மீண்டும் காட்டில் விடுவித்துள்ளனர். இந்த திகிலூட்டும் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி, மக்கள் மத்தியில் பலத்த கருத்துக்களை ஏற்படுத்தி வருகிறது. சிலர், “தேவையில்லாமல் ஏன் தண்ணீரில் கையை வைத்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.