உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி, ரக்ஸா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆர்.ஹெச். காலனியில் வசிப்பவர் ரவிந்திர பிரதாப் சிங். தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் இவர், தனது மனைவி ஷீலா சிங் மற்றும் 13 வயது மகனுடன் வசித்து வந்தார். இவர்களின் மகிழ்ச்சியான குடும்பத்தில், மகன் அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் பப்ஜி கேம் விளையாடும் பழக்கத்தால் ஷீலா சிங் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார்.

தங்கள் குடும்பத்தின் முழுச் சொத்தே மகன்தான் என்றும், இந்த மோகத்தால் அவரது எதிர்காலம் பாழாகிவிடுமோ என்று மனைவி அடிக்கடி கவலை கொண்டதாக கணவர் ரவிந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். மகனின் அதி தீவிரமான இந்த பழக்கத்தை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று அவர் தொடர்ந்து முயன்று வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த நவம்பர் 11-ஆம் தேதி இரவு, மகனைப் பற்றித் தனது கணவரிடம் மீண்டும் வருத்தத்துடன் பேசிய ஷீலா சிங், இரவு 11 மணிக்கு மேல் உறங்கச் சென்றுள்ளார்.

இரவு சுமார் 2 மணியளவில் திடீரென விழித்த கணவர் ரவிந்திர பிரதாப் சிங், மனைவி படுக்கையில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து வீடு முழுவதும் தேடியுள்ளார். அப்போது, வீட்டில் உள்ள கோயில் அறையில் ஷீலா சிங் தூக்கில் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அலறிக் கூச்சலிட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து ரக்ஸா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரக்ஸா காவல் நிலைய அதிகாரி ரூபேஷ் குமார், “நள்ளிரவில் அந்தப் பெண் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது, விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார். மகனின் எதிர்காலத்தைக் குறித்துக் கொண்ட கவலையே அவர் இந்த தீவிர முடிவை எடுக்கக் காரணம் என்று காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.