டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள புலனாய்வு அமைப்புகள், ஹரியானாவின் ஃபரிதாபாத், காண்ட்வாலியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற ஈக்கோஸ்போர்ட்ஸ் காரை அதன் உரிமையாளர் ஃபஹீம் என்பவருடன் சேர்த்து அதிரடியாகக் கைது செய்துள்ளன. கைது செய்யப்பட்ட ஃபஹீம், குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட i20 காரை ஓட்டி வந்த பயங்கரவாதி உமரின் உறவினர் என்று கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மூன்றாவது காரான பிரெஸ்ஸா காரையும் போலீசார் தற்போது மீட்டுள்ளனர். இந்த பயங்கரவாதக் குழுவினர் மூன்றாவது கார் குண்டை வெடிக்கச் செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அது செயல்படுத்தப்படுவதற்கு முன்பே இந்தக் கார் மீட்கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உமருடன் ஃபஹீம் தொடர்பில் இருந்தாரா, அவரிடம் வெடிபொருட்கள் இருந்ததா, மற்றொரு சம்பவத்திற்கு அவர் திட்டமிட்டாரா என்பது குறித்து பாதுகாப்பு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. மேலும், i20 மற்றும் ஈக்கோஸ்போர்ட்ஸ் கார்களின் உரிமையாளர்களுடன் தேவேந்திரா என்பவரின் பெயர் இணைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.