நாமக்கல் – சேலம் சாலையில் ஒரு நபர் காரை ஓட்டிச் சென்றபோது, தனது காரின் பக்கவாட்டுக் கண்ணாடியின் உள்ளே பாம்பு ஒன்று மறைந்திருந்ததைக் கண்டு திகிலடைந்தார். அன்றாடப் பயணமாகத் தொடங்கிய இந்த நிகழ்வு, சில விநாடிகளில் அவருக்குப் பயங்கர அனுபவமாக மாறியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ, எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘கொம்பேறி மூக்கன்’ வகையைச் சேர்ந்த சிறிய பாம்பு ஒன்று, பக்கவாட்டுக் கண்ணாடியின் ஓரத்தில் இருந்து வெளியே வர முடியாமல் நெளிந்து வளைவதைக் காண முடிகிறது.

 

பாம்பு எப்போது வேண்டுமானாலும் காருக்குள் ஊர்ந்து வந்து விடுமோ என்ற பயத்தில் காரின் உள்ளே இருந்த ஓட்டுநரும், உடன் பயணித்த பெண்ணும் என்ன செய்வது என்று தெரியாமல் பேசித் தவிப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, ஓட்டுநர் உடனடியாகக் காரைப் பாதுகாப்பாக நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பின்னர், அவ்வழியே சென்றவர்கள் வனவிலங்கு மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த அவர்கள் பாம்பைப் பாதுகாப்பாக மீட்டுச் சென்றனர். குளிர் மற்றும் மழைக் காலங்களில் பாம்புகள் வெப்பத்தைத் தேடி வாகனங்களுக்குள் தஞ்சமடைய வாய்ப்புள்ளதால், நீண்ட நேரம் வாகனங்களை நிறுத்திய பிறகு, ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை கவனமாகச் சரிபார்க்க வேண்டும் என்று வனவிலங்கு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.