இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், ‘போவிஸ்டிரா’ (Poviztra) என்ற பெயரில் புதிய மருந்து ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்து, உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற எடை குறைப்பு மருந்தான ‘வெகோவி’ (Wegovy)-யின் இரண்டாவது பிராண்ட் வகையாகும்.

டென்மார்க்கை தளமாகக் கொண்ட முன்னணி மருந்து நிறுவனமான நோவோ நோர்டிஸ்க், இந்தியாவின் எம்கியூர் பார்மாவுடன் (Emcure Pharma) இணைந்து இந்த போவிஸ்டிராவை விநியோகம் செய்ய உள்ளது. இந்த பிராண்டு செமாக்ளூடைடு (Semaglutide 2.4 mg) என்ற அதே மூலக்கூறைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டணியின் மூலம், உடல் பருமன் சிகிச்சையானது நாட்டின் பரவலான பகுதிகளுக்கும், குறிப்பாக மருந்தகங்கள் மூலமாக அதிக மக்களைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​இந்த அறிவிப்பு பங்குச்சந்தையில் உடனடியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. போவிஸ்டிராவின் விநியோக உரிமை எம்கியூர் பார்மாவுக்குச் சொந்தமானது என்ற செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே, அந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 7% வரை உயர்ந்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தன.

எம்கியூர் நிறுவனத்தின் வலுவான விநியோகத் திறன்களைப் பயன்படுத்தி, செமாக்ளூடைடு போன்ற நவீன எடை குறைப்பு மருந்துகளை இந்தியச் சந்தையில் பரந்த அளவில் கொண்டு சேர்க்க முடியும் என்று நோவோ நோர்டிஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவில் வளர்ந்து வரும் உடல் பருமன் சிகிச்சை சந்தையின் முக்கியத்துவத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது