சமூக வலைதளங்களில் அன்றாடம் பலவிதமான வீடியோக்கள் வெளியாகும் நிலையில், மனிதநேயத்தை உணர்த்தும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. நம்முடைய பரபரப்பான அன்றாட வாழ்க்கையில், பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சில விஷயங்களைக் கவனிக்காமல் நாம் கடந்து செல்வதுண்டு. ஆனால், ஒரு சிலரோ தாமாக முன்வந்து ஆபத்தை நீக்கி, பிறரின் உயிரைக் காக்க முற்படுகிறார்கள்.

 

அப்படியான ஒரு நிகழ்வு தொடர்பான வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் செயல், இன்னும் சமுதாயத்தில் மனிதநேயம் உயிர்ப்புடன் இருப்பதை வெளிப்படுத்துவதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவில், சாலையில் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில், உடைந்த நிலையில் இருந்த ஒரு போக்குவரத்துப் பலகை ஆபத்தான நிலையில் சாலைக்குக் குறுக்கே தொங்கிக் கொண்டிருந்தது. இது எந்த நேரத்திலும் பெரிய விபத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான சூழ்நிலையாக இருந்தது.

வாகனங்கள் மெதுவாகச் சென்றபோதிலும், அதைச் சரிசெய்யவோ அல்லது அப்புறப்படுத்தவோ யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில், ஒரு நபர் தானாக முன்வந்து அந்த உடைந்த பலகையைச் சரிசெய்து, ஆபத்தில் இருந்து சாலையைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். @learning45378 என்ற பயனர் பெயரில் ‘எக்ஸ்’ தளத்தில் பகிரப்பட்ட இந்த 45 வினாடி வீடியோ, இதுவரை 1,44,000-க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. “பல லட்சம் பேருக்கு மத்தியில் ஒரு நட்சத்திரம் போல் இவர் பிரகாசிக்கிறார். இது போன்றவர்களால்தான் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர முடியும்” என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.