சமூக வலைதளங்களில் தினமும் ஆச்சரியமான நிகழ்வுகள் வெளியாகும் நிலையில், ஓடும் ரயிலில் சக பயணிகள் மத்தியில் ஒருவர் குளிக்கும் வீடியோ வெளியாகி, இணையத்தில் நகைச்சுவையையும், கோபத்தையும் ஒருசேர ஏற்படுத்தி, பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

அந்த வைரல் வீடியோவில், ரயில் கழிப்பறைக்கு அருகில் ஒரு நபர் வெறும் காற்சட்டை மட்டும் அணிந்துகொண்டு, பக்கெட்டில் நீர் நிரப்பி, அதைத் தலையிலும் உடலிலும் ஊற்றிக் குளிப்பதைக் காணலாம். அவர் சாதாரணமாக சோப்பு போட்டு, ஏதோ ஒரு ஏரிக்கரையில் குளிப்பது போலத் துளியும் பதற்றமின்றி இந்தச் செயலைச் செய்கிறார்.

 

இந்தச் சம்பவத்தின் சுவாரஸ்யமே, ரயில் பெட்டி முழுவதும் பயணிகள் நிறைந்திருப்பதுதான். இதைக் கண்டு ஆச்சரியமடைந்த பலரும், தங்கள் கைப்பேசியை எடுத்து வீடியோ எடுக்கின்றனர். ஆனால், அந்த நபர் அதுபற்றிச் சற்றும் கவலைப்படாமல், மகிழ்ச்சியுடன் தனது ரயில் பயணக் குளியல் சேவையைத் தொடர்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான மறுகணமே வைரலானது.

பலர் இதை வேடிக்கையாகக் கருதினாலும், பலரும் பொது இடங்களில் விதிகளைப் பின்பற்றுவது என்பது வெறும் சடங்காகிவிட்டதா? மற்றவர்களின் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் சுயநலத்துடன் செயல்படுவது சாதாரணமாகிவிட்டதா? என்று கேள்வி எழுப்பி, இச்செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சில வினாடிகள் ஓடும் இந்த வீடியோ, பொறுப்பற்ற செயல் குறித்த பெரிய விவாதத்தைத் தூண்டியுள்ளதால், விரைவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.