கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வந்த 40 வயதுடைய ஒருவருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்தபோது, எச்.ஐ.வி. வைரஸ் தொற்று (எய்ட்ஸ் நோய்) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவரது குடும்பத்தின் மகிழ்ச்சியான காலச் சக்கரத்தில் பேரிடி விழுந்தது.

இதையடுத்து, அவரது 38 வயது மனைவி, 17 வயது மகள் மற்றும் 9 வயது மகன் ஆகியோருக்குச் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள் வெளிவந்தபோது, பிளஸ்-2 படிக்கும் மகளுக்கு மட்டும் எய்ட்ஸ் பாதிப்பு இல்லை என்றும், தாய்க்கும், 9 வயது மகனுக்கும் கணவரிடம் இருந்து நோய் பரவி இருந்ததும் தெரியவந்தது.

இந்தச் சோகச் செய்தியால் உடைந்துபோன தாய், தன் வாழ்க்கையே நாசமாகிவிட்டதாக அழுது புலம்பினார். மேலும், தங்களுடன் வசித்து வந்தால் மகளுக்கும் நோய் தொற்று பாதிக்கும் என்று அச்சம் அடைந்தார். தானும் மகனும் இதேபோல் அவதிப்பட வேண்டுமே என்று பலவாறு யோசித்த அவர், ஒரு கட்டத்தில் எய்ட்ஸ் பாதித்த மகனைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.

மனதை கல்லாக்கிக் கொண்ட அந்தப் பெண், அருகில் கிடந்த தலையணையை எடுத்து அசந்து தூங்கிக்கொண்டிருந்த மகனின் முகத்தில் வைத்து அமுக்கி மூச்சுத் திணறடித்துக் கொன்றார். மகன் இறந்ததை உறுதிசெய்த பின்னர், தனது சேலையால் மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

நேற்று காலை, பிளஸ்-2 மாணவி எழுந்தபோது, தாய் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டு இருந்ததையும், தம்பி இறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். இது தொடர்பாக சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நெஞ்சை உலுக்கும் கோரச் சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.