கர்நாடக மாநிலம் பெங்களூரு எலகங்கா பகுதியில், மெகந்தி நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக, ஒரு குடும்பத்தினர் மீது 30-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடங்கிய கும்பல் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு எலகங்கா, முனீஸ்வரா லே-அவுட்டில் வசித்து வருபவர் சீனிவாஸ்.
இவரது மனைவி பிரமிளா. இவர்களது பக்கத்து வீட்டில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மோகன் மற்றும் ரஷித் ஆகியோர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மோகன் வீட்டில் திருமணத்திற்காக மெகந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கேரளாவில் இருந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்திருந்தனர்.
அப்போது, மோகனின் வீட்டிற்கு வந்திருந்த ஒரு உறவினரை சீனிவாஸின் மகன் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மோகனின் குடும்பத்தினருக்கும், பிரமிளாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மோகன் தனக்குத் தெரிந்த தங்கும் விடுதியில் வசிக்கும் 30 சிறுவர்களைத் தூண்டிவிட்டு, பிரமிளாவையும் அவரது மகனையும் தாக்கச் சொல்லியுள்ளார்.
இதன்படி, விடுதியில் இருந்து வந்த சுமார் 30 சிறுவர்கள் பிரமிளாவின் வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சீனிவாசையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து பிரமிளா அளித்த புகாரின் பேரில், எலகங்கா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
