மத்திய பிரதேச மாநிலம் பச்மாரியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநிலத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமிற்கு காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, 20 நிமிடங்கள் தாமதமாக வருகை தந்தார்.இதைக் கவனித்த மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சச்சின் ராவ், ‘முகாமின் நடத்தை விதிகளின்படி தாமதமாக வந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

உடனே ராகுல் காந்தி, ‘அதற்கான தண்டனை என்ன?’ என்று கேட்க, அதற்கு சச்சின் ராவ், ’10 முறை தண்டால் போட வேண்டும்’ என்று சிரித்தபடி பதிலளித்தார். இதனைக் கேட்ட ராகுல் காந்தி, மறுப்பு தெரிவிக்காமல் கூட்டத்தின் நடுவிலேயே தண்டால் எடுத்தார்.

இந்தச் செயலைப் பார்த்த அனைத்துக் காங்கிரஸாரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பின்னர் பேசிய ராகுல் காந்தி, அரியானா தேர்தலில் நடந்த வாக்குத் திருட்டு குறித்து விளக்கமளித்ததுடன், வரவிருக்கும் தேர்தல்களில் தொண்டர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் அறிவுரை வழங்கினார்.