அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதில் இருந்து, “அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே” என்ற கொள்கையைப் பின்பற்றி வரும் டொனால்டு ட்ரம்ப், அந்நாட்டின் மீது அதீத ஏற்றுமதி வரி விதிக்கும் நாடுகளுக்குப் பதிலடியாக பரஸ்பர வரியை விதித்தார்.
மேலும், இந்த வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு தொகையை நாட்டு மக்களுக்கே திரும்ப வழங்குவதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், ட்ரம்ப் நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, அதிக வருமானம் ஈட்டுபவர்களைத் தவிர்த்து, பிற அனைத்து அமெரிக்க மக்களுக்கும் தலா ரூ.1¾ லட்சம் (2,000 அமெரிக்க டாலர்கள்) வழங்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தொகையானது பயனாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ட்ரம்ப் இந்தத் திட்டத்தை, தான் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான ட்ரூத் சோசியல் (Truth Social) தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். ட்ரம்ப்பின் இந்தக் கொள்கை, அமெரிக்கப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், சாதாரண அமெரிக்க மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் நோக்குடன் பார்க்கப்படுகிறது.
