நாகப்பட்டினம் மாவட்டம் வாழைக்கரை பகுதியைச் சேர்ந்த ராஜாராமன் (வயது 37) என்பவர், நாகை அடுத்த திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாகப் பணியாற்றி வந்தார்.
திருமணமாகி ஒரு மகன் இருக்கும் இவருக்கு, கடந்த ஆண்டு லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, மீண்டும் பணியைத் தொடர்ந்தவர். இந்நிலையில், லஞ்சம் வாங்கிய வழக்கு விசாரணைக்காக முன்தினம் நாகைக்குச் சென்ற ராஜாராமன், மாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குப் புறப்பட்டுள்ளார்.

ஆனால், இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை நாகை செல்லூர் கிழக்கு கடற்கரைச் சாலையில், ராஜாராமன் முகம், தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்துத் தகவல் அறிந்து விரைந்த வெளிப்பாளையம் போலீஸார், ராஜாராமன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் முதலில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், ராஜாராமனின் மரணத்திற்கு இரண்டு திருநங்கைகளே காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, நிவேதா மற்றும் ஸ்ரீகவி என்ற அந்தத் திருநங்கைகளை போலீஸார் கைது செய்து விசாரித்ததில் மேலும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானது.
அன்று இரவு போதையில் படுத்திருந்த ராஜாராமனிடம் இருந்து பணம், செல்போன், மோதிரம் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு, அவர் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
