அதிமுகவில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி. சத்தியபாமா உள்ளிட்ட தனது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று (நவ. 9) கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர், “அதிமுக என்ற இயக்கம் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களால் பல தியாகங்கள் செய்து வளர்க்கப்பட்ட இயக்கம். ஆனால், பல பேர் நன்றி மறந்து சென்றுவிட்டனர்” என்று குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், “ஜெயலலிதா மன்னிக்கும் தன்மை படைத்தவர். 1989-ல் தனது நகை, பொருட்களை வழங்கி கட்சியை வலிமைப்படுத்தினார். உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த முடியாது” என்று ஆவேசமாகக் கூறினார். மேலும், “ஜெயலலிதா வழியில் தொடர்ந்து பயணித்து வருகிறேன்.
தொண்டர்களைக் காக்க என்ன செய்ய வேண்டுமோ அந்தப் பணியை அவர் செய்து வந்தார். விரைவில் சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார். தன்னைப் பற்றிப் பேசிய செங்கோட்டையன், “நான் இளவரசர் போல இல்லை. உங்கள் வீட்டுப் பிள்ளையாக எளிமையாகத்தான் இருந்து வருகிறேன்” என்றும் குறிப்பிட்டார்.
