ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கோஹானா பகுதியில், மனிதத்தன்மையற்ற மற்றும் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கணவர் வேலைக்குப் போய் சம்பாதிக்கவில்லை என்ற கோபத்தில், மனைவியே செங்கல் மற்றும் தடியால் அடித்துக் கணவனைக் கொன்றது அப்பகுதி முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கோஹானாவில் உள்ள கரி சராய் நாம்தார் கான் என்ற கிராமத்தில் சுரேஷ் மற்றும் பூனம் என்ற தம்பதியினருக்குள் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சுரேஷ் ஆட்டோ ஓட்டி வந்தவர், ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். இதனால் சம்பாதிக்கவில்லை என்று கூறி கணவன்-மனைவிக்கு இடையே தினமும் சண்டை வந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் கூற்றுப்படி, பூனம் தினமும் சுரேஷை துடைப்பம் மற்றும் செருப்பால் அடிப்பது வழக்கம். சம்பவத்தன்று, பூனம் ஆத்திரத்தில் சுரேஷை செங்கல் மற்றும் தடியால் அடித்துக் கொன்றுவிட்டார்.
கொலை நடந்த பிறகு பூனம் செய்த செயல் காவல்துறையினரை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தன் கணவனின் சடலத்திற்கு அருகில் அமர்ந்த பூனம், முகத்தில் மேக்கப் போட்டுக்கொண்டிருந்தார். அதன்பின், சீப்பால் கணவனின் முகத்தில் குத்துவது, கன்னத்தில் அறைவது, தலையில் உதைப்பது என்று சடலத்தை மேலும் துன்புறுத்தி உள்ளார். அக்கம் பக்கத்தினர் இதை வீடியோ எடுத்த நிலையில், தகவல் அறிந்து வந்த போலீஸார் உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து பூனம்மைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
