தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணிப் பகுதியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி ஆதிலட்சுமி, தனது பொழுதைப் போக்குவதற்காக வாங்கியிருந்த ரூ.700 மதிப்பிலான ரேடியோவை, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு மர்ம நபர் திருடிச் சென்றுவிட்டதால் பெரும் சோகத்திற்கு ஆளானார்.
இது குறித்து அவர் புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ரேடியோவில் தினமும் எஃப்.எம். பாட்டுக் கேட்கும் பழக்கம் தடைப்பட்டதால், அவருக்குச் சோர்வும் தனிமையும் ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆதிலட்சுமி, மாவட்ட ஆட்சியரிடம் ஒரு நெகிழ்ச்சியான மனுவைக் கொடுத்தார். அதில், “ரேடியோவைக் கண்டுபிடித்துத் தர வேண்டும், பாட்டுக் கேட்காமல் ஏதோ இழந்தது போன்று உள்ளது, பொழுதே போகவில்லை” என்று கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.
இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியாகவே, அதைத் தொடர்ந்து ஹலோ எஃப்.எம். வானொலி நிலையம் சார்பில், அந்த மூதாட்டிக்கு நேற்று புதிய ரேடியோ ஒன்று வழங்கப்பட்டது. அந்த ரேடியோவைப் பெற்றுக்கொண்ட ஆதிலட்சுமி, மகிழ்ச்சியுடன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டார்.
