கோவையில் 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 3 குற்றவாளிகளுக்கும் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, தனது காதலனுடன் விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிரிந்தாவன் நகர் காட்டுப் பகுதியில் காரில் பேசிக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (எ) கருப்புசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன் மற்றும் மதுரையைச் சேர்ந்த குணா (எ) தவசி ஆகிய 3 பேரும் மாணவரின் காதலனை அரிவாளால் வெட்டிவிட்டு, மாணவியைத் தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 குற்றவாளிகளையும் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். அவர்கள் மூவரும் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், 3 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு கோவை நடுவர் நீதிமன்ற நீதிபதி அப்துல் ரகுமான், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 பேரிடமும் நேரில் சென்று ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையைத் தொடர்ந்து, 3 பேரையும் வரும் நவம்பர் 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.