மனிதர்களின் விருப்பமான செல்லப்பிராணிகளான பூனை மற்றும் நாய்களின் குறும்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் எப்போதும் கவனத்தை ஈர்க்கும் நிலையில், கோல்டன் ரெட்ரீவர் இன நாய் ஒன்று செய்த நகைச்சுவையான ‘நடிப்பு’ இணையவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின்  தரையில் அமர்ந்திருந்த அந்த நாயின் வலது பாதத்தை, கதவைத் திறந்து உள்ளே கொண்டு வரப்பட்ட ஸ்கூட்டியின் முன் சக்கரம் லேசாக தொட்டுச் சென்றது. அவ்வளவுதான், அடுத்த நொடியே அந்த நாய், தனது காலில் கடுமையான காயம் ஏற்பட்டது போல நடிக்கத் தொடங்கியது.

 

மேலும், சுவாரஸ்யமாக, ஸ்கூட்டியின் சக்கரம் வலது காலைத் தொட்ட நிலையில், இந்தச் சாமர்த்தியமான நாய் தனது இடது காலில் வலி ஏற்பட்டது போல் நொண்டியபடி நடித்துள்ளது. வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்தச் சுமார் ஒரு நிமிடக் காணொளியை @Saffron_Sniper1 என்ற கணக்கு மூலம் ‘X’ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்தக் குறும்பான செயலைக் கண்ட பல பயனர்கள், அதன் நடிப்புத் திறமையைப் பாராட்டி, இதற்கு ஆஸ்கர் விருது வழங்க வேண்டும் எனக் கலகலப்பாகப் பதிவிட்டு, நாயின் புத்திசாலித்தனத்தையும் பாராட்டி வருகின்றனர்.