கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் பிரபல தனியார் தொழிற்சாலை ஒன்றின் சார்பில் செயல்பட்டு வரும் பெண் தொழிலாளர்கள் தங்கும் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான பெண்கள், விடுதிக் குளியலறையில் கேமரா வைக்கப்பட்டதைக் கண்டித்து நேற்று இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், விடுதியின் குளியல் அறையில் கேமராவை வைத்த வட மாநிலத்தைச் சேர்ந்த நீலாமாரி குப்தா என்பவரை கைது செய்தனர். அவர் எதற்காக கேமரா வைத்தார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
