தாய்லாந்தில் பாங்காக்கைச் சேர்ந்த பயண உள்ளடக்கத்தை உருவாக்கும் எம்மா என்ற பெண், தனது காதலருடன் ஆட்டோ ரிக்ஷாவில் பழைய டெல்லியில் பயணம் செய்தபோது தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தையும், மோசமான அனுபவத்தையும் பற்றி வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்தியாவில் பையைத் தூக்கிக்கொண்டு பயணம் செய்யும் இந்த ஜோடி, அந்தச் சம்பவத்தை “மன அழுத்தம் தருவது மற்றும் களைப்பை ஏற்படுத்துவது” என்று விவரித்துள்ளனர்.

தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த அவர்கள், யாசகர்கள் மற்றும் திருநங்கைகள் உட்படப் பலரால் சூழ்ந்துகொள்ளப்பட்டு, பணம் கேட்டு நெருக்கடிக்குள்ளாவதைக் காணலாம். சிலர் அவர்களைத் தொட்டுப் பணம் கேட்க முயன்றதால், “அடையாளம் தெரியாத நபர்கள் என்னைத் தொடுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை,” என்று எம்மா வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்த அனுபவம் தன்னை மிகவும் சோர்வடையச் செய்துவிட்டதாகவும், வீடியோ பதிவு செய்வதை விட்டுவிடத் தயாராக இருந்தேன்” என்றும் எம்மா தெரிவித்தார். இருப்பினும், டெல்லியின் எல்லா பகுதிகளும் எதிர்மறையானவை அல்ல என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

“பயணத்தில் இன்பங்களும் துன்பங்களும் கலந்தே இருக்கும், ஆனால் டெல்லி இந்த இரண்டையும் ஒருசேரக் காட்டியது” என்று கூறிய அவர், சிறிது நேரத்திற்குப் பிறகு அமைதியான தோட்டங்கள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் தெரு உணவுகளை அனுபவித்து டெல்லியின் முற்றிலும் மாறுபட்ட பக்கத்தைக் கண்டுபிடித்ததாகக் குறிப்பிட்டார். எம்மாவின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, இந்தியாவின் பொது ஒழுக்கம் குறித்து விவாதத்தைத் தூண்டியுள்ளது. பலரும் யாசகர்களின் நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், வேறு சிலர் இதுபோன்ற தொந்தரவுகளுக்காக இந்தியாவுக்கு வர வேண்டாம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.