பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ‘எக்ஸ்’ (முன்னர் ட்விட்டர்) சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்குப் புனிதமான குரு பூஜையின்போது எனது மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன்” என்று கூறியுள்ளார். மேலும், நீதி மற்றும் சமத்துவத்திற்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும், விவசாயிகளுக்காகவும் அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, இன்றும் வரும் தலைமுறைகளுக்குப் பெரிய ஊக்கத்தை அளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கண்ணியம், ஒற்றுமை மற்றும் சுயமரியாதை ஆகியவற்றின் பக்கம் உறுதியாக நின்ற அவர், சமூக சேவைக்கான உறுதிப்பாட்டுடன் ஆழ்ந்த ஆன்மீகத்தையும் இணைத்தவர் என்றும் பிரதமர் மோடி தனது அஞ்சலியில் புகழாரம் சூட்டியுள்ளார்.