தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தந்தை மற்றும் இரண்டு சிறுமிகள் வைகை அணையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (37) என்பவர், மனைவி பிரியங்கா (30) உடன் வசித்து வந்தார். இவர்களுக்கு தாரா ஸ்ரீ (7), தமிழிசை (5) என இரண்டு மகள்கள் உள்ளனர்.
கணவன்–மனைவி இடையே சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும், கிருஷ்ணமூர்த்தி மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்தி தனது மகள்களுக்கு மிட்டாய் வாங்கித் தருவதாக கூறி, வீட்டிலிருந்து வெளியே அழைத்து சென்றார். ஆனால் நீண்ட நேரம் கடந்தும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த பிரியங்கா பல இடங்களில் தேடியும் கணவரையும் குழந்தைகளையும் கண்டுபிடிக்க முடியாமல் போனதால், போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் நேற்று காலை வைகை அணையில் இரண்டு சிறுமிகள் பிணமாக மிதந்துகொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடல்களை மீட்டனர்.
அந்த இரண்டு சிறுமிகள், மாயமான தாரா ஸ்ரீ மற்றும் தமிழிசை என பிரியங்கா அடையாளம் கண்டார். இதைக் கண்டு அவர் மற்றும் உறவினர்கள் அழுது புலம்பினர். சிறுமிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியை தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்தனர். ஒரு மணி நேர தேடுதலுக்குப் பிறகு கிருஷ்ணமூர்த்தியின் உடலும் அணையிலிருந்து மீட்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், கிருஷ்ணமூர்த்தி தனது இரண்டு மகள்களுடன் வைகை அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அவர் இத்தகைய துயரமான முடிவை எடுக்க காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் தேனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
