பீகாரில் வரும் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தேஜஸ்வி யாதவ், முஸ்லிம் மக்கள் பெருமளவில் வசிக்கும் கதிஹார் மற்றும் கிஷன்கஞ்ச் மாவட்டங்களில் நடைபெற்ற பேரணிகளில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது: “நாட்டின் வகுப்புவாத சக்திகளுடன் லாலு பிரசாத் யாதவ் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை. ஆனால், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எப்போதும் அந்த சக்திகளுக்கு ஆதரவாக செய்கிறார். அவரால்தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் மாநிலத்திலும் நாட்டிலும் வகுப்புவாத வெறுப்பை பரப்புகின்றன.
பாஜக அதாவது ‘இந்தியாவை எரிக்கும் கட்சி’ என்று அழைக்கப்பட வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், வக்குப் திருத்த சட்டத்தை கிழித்து குப்பைத்தொட்டியில் எறிவோம்,” என தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். மேலும் புதிய வக்பு வாரிய சட்டத்திற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
